“வளமான கித்துல் - நிலையான நாடு”கித்துல்சார் எதிர்காலம் வெளியீடு


நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 13 மாவட்டங்களில், மனைக் கைத்தொழிலாக இந்தக் கித்துல் சார் உற்பத்திகள் தயாரிக்கப்படவுள்ளன. கித்துல் அறுவடை முதல் அது சார் உற்பத்திகளின் விற்பனை வரையிலான தொழிற்றுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்த்து, சர்வதேசச் சந்தை வரையில் கித்துல் சார் உற்பத்திகளைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.

அதனை நோக்காகக் கொண்டு, 2021 மார்ச் 17ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, கித்துல் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது.

அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக, “கித்துல் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்ட வரைபு”, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண அவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம், காலி – அக்மீமன ஹியாரே நீர்த்தேக்கத்துக்கு அருகில் வைத்து நேற்று (17) பிற்பகல் கையளிக்கப்பட்டது.

“வளமான கித்துல் – நிலையான நாடு” என்ற தொனிப்பொருளை மையப்படுத்தி, கித்துல் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

கித்துல் பாணி உற்பத்திக்கான ”இலங்கைத் தரம்” அறிமுகப்படுத்தப்படும் வகையிலான “தரச் சான்றிதழ்”, ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெருந்தோட்டக் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திடம் இருந்து கித்துல் அறுவடை தொடர்பில் பயிற்சி பெற்ற மூவருக்கான சான்றிதழ்களும் தொழிற்றுறையினர் ஐவருக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளும், ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்றன.

இதன்போது, கித்துல் உற்பத்திகள் அடங்கிய பேழையொன்று, ஜனாதிபதி அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. கித்துல் அறுவடை, பாணி உற்பத்தி, கித்துல் சார் உணவுப் பொருட்கள், கித்துல் சார் அலங்காரப் பொருட்கள் மற்றும் இந்தத் தொழிற்றுறைக்கான கருவிகளை, ஜனாதிபதி அவர்கள் இதன்போது பார்வையிட்டார்.

மஹா சங்கத்தினர், அமைச்சர் ரமேஸ் பத்திரண, ஆளுநர் விலீ கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான் பி. டீ சில்வா, ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல, இசுறு தொடங்கொட, அருந்திக்க பெர்ணான்டோ, அநூப பெஸ்குவெல் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.