100 நகரங்களை சமநேரத்தில் அபிவிருத்தி செய்யும் திட்டம்
100 நகரங்களை சமநேரத்தில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தை பிரதமர் இந்த மாதம் தொடக்கி வைப்பார்:
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்ற விடயம் -
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைத்து,
அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடயப் பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் -
கௌரவ பிரதமர் மேற்படி கூட்டத்தில், திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை செயற்படுத்தும் 60000 வீடுகள் திட்டத்தில், குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 32000 வீடுகளின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.
கொலன்னாவ, டொரின்டன், புளுமெண்டல், பேலியகொட மற்றும் ஒறுகொடவத்த பிரதேசங்கள், மற்றும் கண்டி, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலனறுவையில் புதிதாக செயற்படுத்தப்படும் நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்பு திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
குறைந்த வருமானம் பெறுவோருக்காக மஹரகம, நுகேகொட மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் புதிதாக வீடமைப்பு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன்,
கோட்டை வீடமைப்பு திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து மேலும் 12000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போதுள்ள நடைபாதைகளுக்கு மேலதிகமாக 25 மாவட்டங்களில் புதிதாக மேலும் 28 நடைபாதைகள் நிர்மாணிக்கப்படும்.
கொழும்பு நகரிலுள்ள பண்டைய கட்டிடங்களை புனரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்திய கௌரவ பிரதமர், அந்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்ட பின்னர் அவற்றை பராமரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
புனரமைப்பின் பின்னர் அக்கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாவிடின் அவை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படும் என்பதை கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை நடுத்தர வருமானம் பெறுவோருக்காக 4000 வீடுகளை நிர்மாணித்து வருவதுடன்,
அந்த திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
தொடர்மாடிக் குடியிருப்பு வளாகங்களை முறையாகப் பராமரிப்பதற்கு கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் பங்கு குறித்தும் அதிகாரிகளினால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
வெள்ளம் மற்றும் மழை நீரினால் மூழ்கும் கொழும்பு நகரம் மற்றும் அதனை சூழ்ந்த பிரதேசங்களில் நீர் வழிந்தோடுவதற்கான கால்வாய்களை சுத்தப்படுத்தி முறையாக பேணுவதன் முக்கியத்துவத்தை கௌரவ பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
கொழும்பில் நீரில் மூழ்கும் பிரதேசங்களிலுள்ள 44 கிலோமீற்றர் வரையான பிரதான கால்வாய் மற்றும் மேலும் 53 கிலோமீற்றர் நீளமான சாதாரண கால்வாய்கள் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவனம் செலுத்திய கௌரவ பிரதமர், சுற்றாடலுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பிற்கு உச்ச இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை கோரியுள்ளதாகவும்,
அதில் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை கிடைத்துள்ளதனையும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்தது.
இவ்வாறு கிடைத்துள்ள இழப்பீட்டுத் தொகையில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் ஒரு மில்லியன் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும், எஞ்சிய 0.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனர்த்த நிலைமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்குமாறு கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
எஞ்சிய இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், நான் முன்னர் வழங்கிய ஓர் ஆலோசனைக்கு அமைய கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவும் முன்மொழிவு தொடர்பிலும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ‘வர்ட் விவ்’ நிறுவனத்துடன் இணைந்து 25,000 ஹெக்டேயர் சதுப்புநில மறுசீரமைப்பு பணிகளை விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன்,
400 சதுர மீட்டர் பவள மறுசீரமைப்பு திட்டத்தை மிரிஸ்ஸவிலிருந்து ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் வள முகாமைத்துவ திணைக்களத்தின் கீழ் காலி மஹமோதர மற்றும் புஸ்ஸ, அம்பலங்கொ பிரதேசங்களின் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காலி, தங்காலை, மெதகெடிய மற்றும் கம்பஹா மாவட்டத்தில் கடற்கரை பூங்காக்களை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக கொடஹேவா, கௌரவ இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments