தற்போது அரச வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது என்பது மிகுந்த போட்டித்தன்மை மிக்கதாக மாறியுள்ளதுடன் அதற்கான பரீட்சைகளும் மிகவும் கடினம் மிக்கவையாக மாறியுள்ளது. இதன் காரணமாக போட்டிப் பரீட்சைகளில் தயார்படுத்தல் இன்றி தோற்றுவது தோல்வியை அளிப்பதாக அமைவதுடன் சிறந்த தயார்படுத்தல் மற்றும் கடின உழைப்பின்மை என்பன உங்களுக்கான வாய்ப்புக்களை மிகவும் குறைப்பதாக அமைந்து விடும்.
போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு தயாராவது என்பது மிகவும் மன அழுத்தத்தினை ஏற்படுத்துவதாகவும் நேரத்தினை செலவழிக்கும் ஒன்றாகவும் அமைகின்றது. ஆனால் உண்மையில் இந்த மன அழுத்தமானது தேவையற்ற ஒன்றாகும். சில எளிய விடயங்களை நீங்கள் செய்வதன் மூலம் இதனை தவிர்க்க முடியும் என்பதோடு பரீட்சையில் வரும் எந்த வினாவினையும் துணிச்சலோடு எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும் உறுதியையும் தருவதாக அமையும்.
01. கற்றலுக்கு தயார் செய்தல்
01. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போதே பரீட்சைக்கான கற்றலில் ஈடுபட ஆரம்பித்தல்.
பாடத்திட்டங்களையும் அதற்கான குறிப்புக்களையும் தயார் செய்வதற்கும் அவற்றை தெளிவாக புரிந்து கொண்டு கற்பதற்கும் போதிய நேரத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். பாடத்திட்டங்களின் தன்மைகளுக்கு அமைய அவற்றினை கற்பதற்கான செயற்பாடுகளை நேரத்துடன் ஆரம்பியுங்கள். உதாரணமாக: பொது அறிவு என்பது பரந்ததொரு பாடப்பரப்பாக போட்டிப்பரீட்சைகளில் காணப்படுகின்றது. இதற்கான கற்றல் ஆயத்தங்களை பரீட்சைக்கு விண்ணப்பித்த உடனேயே ஆரம்பிப்பது நல்லது.
02. பரீட்சைக்கு தயார் செய்யும் குறிப்புக்களை முழுமையாக படியுங்கள்.
இவ்வாறு கற்றுக்கொள்வதானது விடயம் தொடர்பான பரந்த அறிவை தருவதோடு குறித்த விடயத்தினை நினைவுபடுத்தவும் தெளிவாக அறிந்து கொள்ளவும் உதவியாக அமையும். இவ்வாறு கற்பதன் மூலம் உங்கள் பரீட்சைக்கான பாடப்பரப்பில் உள்ள ஒவ்வொரு விடயமும் அமைந்துள்ள பக்கம் மற்றும் அது தொடர்பான முழுமையான விடயங்களை தௌவாகவும் விரைவாகவும் நினைவுபடுத்த முடிவதோடு எந்த விடயமும் தவற விடாமல் கற்றுக்கொள்ள முடியும்.
03. சிறந்த முறையில் பாடக்குறிப்புக்களை தயார் செய்யுங்கள்
போட்டிப்பரீட்சை ஒன்றுக்கான வகுப்பிற்கும் செல்லம் போதோ அல்லது அது தொடர்பான புத்தகம் ஒன்றினை படிக்கும் போதோ அக்குறிப்புக்களை மட்டும் கற்றுக்கொள்ளாது உங்களுக்கான பிரத்தியேகமான குறிப்புக்களை தயார் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஏனைய பரிட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்கு விடையளிக்கும் முறையிலிருந்து வேறுபட்டு சிறந்த முறையில் விடையளிக்க முடிவதோடு தெளிவாகவும் பூரணமாகவும் விடையளிக்க முடியும். சிறந்த பாடக்குறிப்புக்களை தயார் செய்வதற்கு பின்வரும் வழிகளை கையாள முடியும்.
- வகுப்புக்களிலோ அல்லது பரீட்சைக்கான புத்தகத்திலோ குறிப்பிடப்படும் விடயங்களை உத்தியோகபூர்மான தகவல்களா என உறுதிப்படுத்துவதற்கு குறித்த விடயம் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை சென்று பார்வையிட முடியும்
- குறித்த விடயத்துடன் தொடர்புடைய தரவுகளை பல்வேறு இணையத்தளங்களில் இருந்து பெற்று தொகுத்து பாடக்குறிப்பை தயார் செய்யலாம். குறிப்பாக கட்டுரை வினாக்களுக்கு தரவுகள் முக்கியமானவை.
- குறித்த விடயம் தொடர்பான செய்திகளை சேகரித்து அது தொடர்பான பாடக்குறிப்பை தயார் செய்ய முடியும்.
- வரலாறு சம்பந்தமானவை எனின் குறித்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுவதன் மூலமும் அவற்றை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துவதன் மூலமும் குறித்த விடயம் தொடர்பான தெளிவுபடுத்தலை பெற்றுக் கொள்வதோடு எளிதில் நினைவுபடுத்தவும் முடியும். உதாரணமாக: அச்சுவேலி கைத்தொழில் நகர், பொலன்நறுவை சிவன்கோவில், அநுராதபுரத்திலுள்ள ரன்மசு உயன பூங்கா
04. சந்தேகத்திற்கிடமான விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்
போட்டிப்பரீட்சை வகுப்புக்களுக்கு செல்லும் போது வளவாளரிடம் (ஆசிரியரிடம்) சந்தேகத்திற்கிடமான விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் போட்டிப்பரீட்சைக்கு கற்றலில் உள்ள இலகுவான வழி நீங்கள் போட்டிப்பரீட்சைக்குரிய வகுப்புக்களுக்கு செல்லும் போது குறித்த வளவாளர்களிடமிருந்து பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பாடப்பரப்புக்கள் மற்றும் எதிர்பார்க்கை வினாக்களை கேட்டறிந்து கொள்வதாகும். இவ்வாறு கேட்டறிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற விடயங்களை கற்பதற்கு செலவிடப்படும் நேர வீண்விரயத்தினை தவிர்த்துக்கொள்ள முடியும்.
அத்துடன் பரீட்சைக்கு வரக்கூடிய வினாக்களுக்கான தகவல்களை அல்லது அது தொடர்பான வளங்களை எவ்வாறு அல்லது எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் முன்னைய வகுப்புக்களில் இடம்பெற்ற விடயங்களை நீங்கள் உங்கள் வீட்டுக்கு சென்று மீள கற்கும் போது ஏற்பட்ட சந்தேகங்களை அடுத்துவரும் வகுப்பில் வளவாளரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
02. போட்டிப் பரீட்சைக்கான குறிப்புக்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்யலாம்?
01. உங்களுடைய பாடக்குறிப்புக்களை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்
திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலம் உங்களுடைய பாடக்குறிப்புக்களில் உள்ள விடயங்கள் மற்றும் சொற்பதங்கள் தொடர்பிலான தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக: ஒரு பொது அறிவு வினாவிடை பாடக்குறிப்பில் உள்ள ஒரு வினாவினைப் பற்றிப் பார்ப்போம். இது இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப்பரீட்சையில் கேட்கப்பட்ட ஒரு வினா ஆகும்.
அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்பகாலத் தலைவர் யார்?
இதில் நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியது எத்தகைய விடயங்கள்?
- இதனுடைய ஆங்கில சொற்பதம் என்ன?
- இதனுடைய உத்தியோகபூர்வ இணையத்தளம் எது?
- இவ் அமைப்பினுடைய வரலாறு என்ன?
- இதனுடைய உறுப்பு நாடுகள் எவை?
- இவ் அமைப்பில் இடம்பெற்ற அண்மைக்கால மாற்றங்கள் எவை? அல்லது நிகழ்வுகள் எவை?
இவ்வாறு பல்வேறுபட்ட கோணங்களில் நீங்கள் உங்களது பரீட்சைக்கான குறிப்புக்களை தயார் செய்ய வேண்டும். அப்போது தான இவ் விடயம் சம்பந்தமான எவ் வினாவுக்கும் பதிலளிக்க முடியும் எனும் தன்னம்பிக்கை உங்களிடத்தில் வரும்.
முடிந்தவரையில் நீங்கள் இணையத்தளத்தில் தேடும் பொழுது .lk, org, .gov, .edu போன்ற இணையத்தளங்களில் இருந்து தகவலைப் பெற முயற்சி செய்யுங்கள். இவ்வாறானவை உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் என்பதுடன் இவை சரியான தகவலை உங்களுக்கு தருவதாக அமையும்.
02. மீளக்கற்றிலின் போது சிறுகுறிப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள்
மேன்மேலும் சிறு குறிப்புக்களை எடுத்துக் கொள்வதானது உங்களது பரீட்சைக்கான தயார்படுத்தலை இலகுபடுத்தும். இதற்காக நீங்கள் வேறு நிறப் பேனையால் அடிக்கோடிடலாம். அத்துடன சிறு குறிப்புக்களை எடுக்கும் போது பிரதான குறிப்புக்களின் ஒவ்வொரு பந்தியினதும் சாராம்சத்தினை குறித்துக் கொள்வது குறித்த விடயம் தொடர்பான தெளிவான புரிந்து கொள்ளலையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும்.
03. உங்களுடைய பாடக்குறிப்புகள்கள் பரீட்சை பாடத்திட்டதுடன் பொருந்துகின்றதா என்பதனை உறுதி செய்யுங்கள்.
நீங்கள் போட்டிப் பரீட்சை ஒன்றிற்கு தயார்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று குறித்த பரீட்சைக்கான பாடத்திட்டம். நீங்கள் கற்கும் மற்றும் தயார்செய்யம் பாடக்குறிப்புக்கள் பரீட்சை பாடத்திட்டத்துடன் பொருந்துகின்றதா என்பதனை உறுதி செய்யுங்கள்.
04. பாடக்குறிப்புக்களின் தலைப்புக்கள் ஒவ்வொன்றும் பரீட்சை பாடத்திட்டதுடன் பொருந்துகின்றதா என சரிபாருங்கள்
இதற்காக உங்களது பாடக்குறிப்புக்கள் ஒவ்வொன்றினதும் தலைப்புக்களை பரீட்சை பாடத்திட்டதுடன் சரிபார்த்து குறிப்பிடுங்கள். இவ்வாறு செய்வதானது உங்களது பரீட்சை தயார்படுத்தலை மேன்மேலும் இலகுவாக்குவதுடன் நேர விரயத்தினையும் தவிர்க்க உதவும். அதுமட்டுமன்றி இது நீங்கள் குறித்த போட்டிப் பரீட்சையில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களை உறுதி செய்வதோடு இலக்கையும் எளிதாக அடைவதற்கு வழிவகுக்கும்.
03. போட்டிப் பரீட்சைக்கு தயார் செய்வது எவ்வாறு?
01. பரீட்சை தொடர்பான மின்னல் அட்டைகளை தயார் செய்யுங்கள்
மின்னல் அட்டைகள் (Flash Cards) பரீட்சைக்கான தயார்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ் மின்னல் அட்டைகளை நீங்கள் நீங்கள் ஏற்கனவே தயாரித்த பாடக்குறிப்புக்களில் இருந்து தயாரித்துக் கொள்ள முடியும். இதற்காக உங்களது பாடக் குறிப்பில் உள்ள விடயங்களை கேள்வி, விடைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக: DNA பற்றிய பாடக்குறிப்பு ஒன்றை தயார்செய்து வைத்திருப்பீர்களானால் அதற்கான மின்னல் அட்டையினை பின்வருமாறு தயாரிக்கலாம்.
|
லைனசு பாலிங் (Linus Pauling) |
DNA இனை கண்டு பிடித்தவர் யார்? எனும் கேள்வியை ஒரு பக்கத்தில் எழுதியோ அல்லது பிறின்ட் பண்ணியோ எடுத்துவிட்டு குறித்த அட்டையின் மறுபக்கத்தில் லைனசு பாலிங் (Linus Pauling) என விடையை எழுவதோடு அவருடைய படத்தையும் அதில் குறிப்பிடலாம். இவ்வாறு செய்வது குறித்த விடயம் தொடர்பான நினைவாற்றலை எளிதாக அதிகரிக்கும்.
02. வினாடி வினாக்களினை கேட்டல்
நீங்கள் தயார்செய்த மின்னல் அட்டைகளை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே வினாடி வினாக்களை (Quiz) கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் சொல்லும் வரை இதனை தொடரலாம். அத்துடன் இதனை அரை மணி நேரம் தாடர்ந்து செய்த பின்னர் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் அரை மணி நேரம் தொடரலாம்.
நீங்கள் தொடர்ந்தும் ஒரு வினாவுக்கு பிழையாக விடையளிக்கின்றீர்கள் எனின் நீங்கள் குறித்த விடயம் தொடர்பில் போதுமான புரிந்து கொள்ளல் அல்லது தெளிவு உங்களுக்கு இல்லை. எனவே குறித்த பாடப்பரப்பினை மீண்டும் சென்று நன்றாக வாசித்த பின்னர் மீளவும் மின்னல் அட்டைகளை வைத்துக்கொண்டு வினாடி வினாக்களை கேளுங்கள்.
03. பயிற்சி வினாக்களை பயிற்சி செய்யுங்கள்
இம்முறை போட்டிப் பரீட்சைகளைப் பொறுத்தவரை ஏனைய வினாப்பத்திரங்களை விட நுண்ணறிவு வினாப் பத்திரத்திற்கு மிக மிக அவசியமானது. எந்தளவு பயிற்சி செய்கின்றோமோ அந்தளவு நுண்ணறிவு வினாப்பத்திரங்களை விரைவாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளமுடியும்.
அதே வேளை ஏனைய வினாப்பத்திரங்களை பயிற்சி செய்யும் போது மாதிரி வினாப்பத்திரங்களை குறிப்பிட்ட பரீட்சை நேரத்தினுள் பயிற்சி செய்வது பயனளிக்கும்.
04. பரீட்சை தினத்தன்று அதிகாலையில் நித்திரை விட்டெழுங்கள்
பரீட்சை ஒன்றில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு போதியளவு நித்திரை அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பரீட்சைக்கு முதல் நாள் நேரத்திற்கு படுக்கைக்கு சென்று பரீட்சை தினமன்று அதிகாலையில் எழும்புங்கள்.
புறப்படுவதற்கு 02 மணிநேரம் முன்பு மீண்டும் குறித்த பரீட்சை தொடர்பான விடயங்களை விரைவாக மீட்டுப் பாருங்கள். இவ்வாறான துரித மீட்டலுக்கு மின்னல் அட்டைகள் மிகவும் சிறந்தவை.
மேற்கூறிய குறிப்புக்கள் அனைத்தும் போட்டிப பரீட்சை ஒன்றிற்கு சிறந்த முறையில் தயாராவதற்கும் அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளவையாக அமையும் என எண்ணுகின்றேன். கீழே கருத்துப் பக்கத்தில் உங்களது பெறுமதியான கருத்துக்களை தயவு செய்து பதிவிடுங்கள். உங்களது கருத்துக்கள் இந்த இணையத்தளத்தை மேலும் பயனுள்ளதாக வடிவமைக்கவும் சிறந்த ஆக்கங்களை பிரசுரிக்கவும் உறுதுணையாக அமையும்.
நன்றி.
ஆசிரியர்
போட்டிப்பரீட்சை வழிகாட்டி
No comments